தெற்கு ரயில்வே சார்பில் மூன்று வழிதடங்களுக்கு சீசன் டிக்கெட் பெற்று கொள்ளலாம்

தெற்கு ரயில்வே சென்னை பிரிவில் 160 கிலோ மீட்டர் வரை உள்ள மூன்று வழிதடங்களுக்கு சீசன் டிக்கெட் பெற்று கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தற்போதுள்ள விதிகளின்படி சீசன் டிக்கெட்டுகள் அதிகபட்சமாக 150 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே வழங்கப்படுகின்றன. அண்மையில், ரயில்வே வாரியம் மண்டல ரயில்வேயின் பொது மேலாளர்களுக்கு 150 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தூர வரம்பில் விலக்குகளை தீர்மானிக்க அதிகாரங்களை வழங்கியுள்ளது.

அதனடிப்படையிலும் அதிகபட்ச தூர வரம்பு 160 கிலோ மீட்டருக்கு உட்பட்ட சில பிரிவுகளுக்கு சீசன் டிக்கெட் வழங்க வேண்டும் என பல்வேறு ரயில் பயணிகள் சங்கங்கள், சீசன் டிக்கெட் பயணர்கள் மற்றும் ரயில் பயணர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர், சென்னை பிரிவில் பின்வரும் பாதைகளில் சீசன் டிக்கெட் வழங்க அனுமதி அளித்துள்ளார்.

சென்னை சென்ட்ரலில் இருந்து மேளாலத்தூர் வரை அரக்கோணம் மற்றும் காட்பாடி வழியாக 158.81 கி.மீ தூரத்திற்கும், சென்னை எழும்பூர் முதல் குடியாத்தம் வரை சென்னை பூங்கா வழியாக – சென்னை சென்ட்ரல், அரக்கோணம் மற்றும் காட்பாடி 155.36 கிலோ மீட்டர் தூரத்திற்கும், சென்னை பூங்கா வழியாக சென்னை எழும்பூர் முதல் குடியாத்தம் வரை – சென்னை கடற்கரை- வண்ணாரப்பேட்டை, அரக்கோணம் மற்றும் காட்பாடி 159.91 கிலோ மீட்டர் தூரத்திற்கும் இரு முனைகளிலும் உள்ள ஆரம்ப ரயில் நிலையங்களில் சீசன் டிக்கெட்டுகளைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பிரிவுகளில் சீசன் டிக்கெட்டுகளைப் யுடிஎஸ் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், பயணிகள் மற்றும் பொது மக்கள் சீசன் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வசதியைப் பயன்படுத்தி கொள்ளுமாறு தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version