விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

கார்த்திகைத் தீப திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள், வரும் 9 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வருகிற 10 ஆம் தேதி மாலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனைக் காண தமிழகம் மட்டுமன்றி பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். இந்த நிலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களின் வசதிக்காக விழுப்புரம், திருவண்ணாமலை இடையே 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறன.

10 மற்றும் 11ஆம் தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து காலை 9.20 மணிக்கு சிறப்பு ரயில் திருவண்ணாமலைக்கு புறப்படுகிறது. மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 1.40 மணிக்கு சிறப்பு ரயில் விழுப்புரம் புறப்படுகிறது.

இதேபோல், வரும் 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை விழுப்புரத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு சிறப்பு ரயில் திருவண்ணாமலைக்கு புறப்படுகிறது. 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு விழுப்புரம் சென்றடைகிறது.

Exit mobile version