சந்திரயான் 2 விண்கலத்தை இயக்கி விஞ்ஞானிகள் சோதனை

தமிழகத்தில் நிலவில் உள்ள பாறையை துல்லியமாக ஒத்திருக்கும் அதிசய பாறைகள் கிடைப்பதும் இந்த பாறை துகள்களின் மீது சந்திரயான் 2 விண்கலத்தை இயக்கி விஞ்ஞானிகள் சோதனை நடத்தியதும் தெரிய வந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை இப்போது காணலாம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தம்பூண்டி கிராமம் இது… இந்த கிராமம் வழக்கமான தமிழக கிராமம் அல்ல… நிலவுக்கும் இந்த கிராமத்துக்கும் உள்ள தொடர்பு ரொம்பவே அதிகம்…சந்திரயான் 2 விண்கலத்திற்கான ஆய்வில் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கிடைத்த மண் மிகப்பெரிய பங்காற்றி உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? சந்திரயான் 2 திட்டம் தயாரான உடன் எழுந்த பல கேள்விகளில் ஒன்று , சந்திரயான் 2 நிலவின் தரையில் எப்படி இறங்கும், எப்படி நகரும் என்பது…

ஏனென்றால் நிலவின் தரையில் உள்ள மண் பூமியில் உள்ள மண்ணில் இருந்து மாறுபட்டது. நிலவின் மண் கண்ணாடித்துகள் போல இருக்கும். இதனால் சந்திரயான் 2 ன் லாண்டர் சரியாகத் தரை இறங்குவதும், சந்திரயான் 2ன் ரோவர் நிலவின் தரையில் நகர்வதும் கடினமானது.

இந்த காரணத்தால் நிலவில் காணப்படும் அதே ரகத்தைச் சேர்ந்த பாறை மண் கிடைத்தால் நன்றாக இருக்கும் என இஸ்ரோ கருதியது. இதையடுத்து நிலவில் கிடைக்கும் மண் போல நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டியில் கிடைப்பதாக சேலம் பெரியார் பல்கலைகழக மண்ணியல் துறையினர் இஸ்ரோவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அண்ட பெருவெடிப்பின் போது சூரியனில் இருந்து பூமி பிரிந்து உருவானதைப் போலவே, நிலவும் பூமியில் இருந்து பிரிந்துதான் உருவானது. ஆனால் நிலவின் மண்ணும் பூமியின் மண்ணும் 99% ஒன்றாக இருப்பது இல்லை. அதேசமயம் புவியின் சில இடங்களில் மட்டும், நிலவில் காணப்படும் அதே மண் காணப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் ஒளிரும் தன்மையுள்ள பாறைகள் உள்ளன. உள்ளூர்மக்களால் சந்திர மண்டலக்கல் என்று அழைக்கப்படும் இவை ‘அனார்த்தசைட் கேப்ரோ, எக்லோகைட்’ – வகையைச் சேர்ந்தவை. இவற்றின் வயது 2 ஆயிரத்து 500 மில்லியன் ஆண்டுகள் என்று கணிக்கப்படுகிறது. சித்தம்பூண்டியில் இவற்றின் சிறந்த ரகம் காணப்படுவதால் இந்தப் பகுதியை ‘சித்தம் பூண்டி அனார்த்தசைட் காம்ப்ளக்ஸ்’ – என்றே புவியியல் வல்லுநர்கள் அழைக்கின்றனர்.

சித்தம்பூண்டியில் கிடைத்த மண்ணில் சந்திரயான் 2 ன் லாண்டர் மற்றும் ரோவரை இறக்கியும் நகர்த்தியும் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்ற பின்னரே சந்திரயான் 2 வை நிலவில் தைரியமாக இறக்கலாம் என இஸ்ரோ முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன், அமெரிக்க நெவேடா பாலைவனத்திலும், ரஷ்யாவின் சைபீரிய பாலைவனத்திலும் கூட, இதே வகைப் பாறைகள் இருப்பதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் அறிந்தனர். ஆனால் அங்கு மிக குறைந்த அளவில் தான் கிடைக்கிறது. சித்தம் பூண்டியில் மிகுதியான அளவில் கிடைப்பது நமது நாட்டிற்கு வரப்பிரசாதமாக உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இந்த மண்ணை கிலோவிற்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்குவதாக சொல்கிறார் பேராசிரியர் அன்பழகன்.

சந்திரயான் 2 நிலவில் தரையிரங்கும் போது தமிழகம் பெருமைப்பட நிறைய உள்ளது. அதில் சித்தம்பூண்டியும் இடம் பிடித்திருக்கிறது.

Exit mobile version