காஷ்மீரில் 2 வாரங்களுக்கு பின் பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு

காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதையொட்டி முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட பள்ளிகள் 2 வாரங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புத் தகுதிக்கான அரசியல் சட்டத்தின் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்யப்பட்டதால் அந்த மாநிலத்தில் கூடுதல் படையினர் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர். இதனால் ஆகஸ்டு ஐந்தாம் தேதி முதல் காஷ்மீரில் உள்ள பள்ளிகள் காலவரையற்று மூடப்பட்டன. என்ஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களின் விடுதிகளில் இருந்தும் மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதையொட்டி அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் முக்கிய இடங்களில் பாதுகாப்புப் படையினர் காவலுக்கு நிறுத்தப்பட்டனர். காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் இயல்புநிலை திரும்பியதை அடுத்து தொலைத்தொடர்பு சேவைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் ரஜோரி மாவட்டத்தில் இருவாரங்களுக்குப் பின் பள்ளிகள் இன்றும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் வகுப்பறைகளுக்குச் சென்றனர்.

Exit mobile version