தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் சாத்தியக்கூறு தற்போதைக்கு இல்லை என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சித்தோடை அடுத்த பச்சப்பாளி பகுதியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற மறைந்த தலைவர் ஜி.கே. மூப்பனார் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பவானிசாகர் அணை மூன்று முறை நிரம்பி இருப்பதாகவும், மேட்டூர் அணையில் 300 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் குறையாமல் இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார். கொரோனோ பாதிப்பு குறையும் வரை, தமிழகத்தில் பள்ளிகள் திறப்புக்கான வாய்ப்பு இல்லை எனவும் அமைச்சர் கூறினார்.