தென்காசியில், பள்ளி விடுமுறையையொட்டிப் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மாணவர்கள் உற்சாகமாகப் பொழுதுபோக்கி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், அரையாண்டுத் தேர்வு முடிந்து 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டித் தென்காசி மாவட்டம் அருணாசலபுரத்தில், பள்ளி மாணவர்கள் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுக்களான பச்சைக்குதிரை தாண்டுதல், கோலிக்குண்டு, பம்பரம் சுற்றுதல் போன்ற விளையாட்டுக்களை ஆர்வத்துடன் விளையாடி மகிழ்கின்றனர். தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இன்றைய நாகரிக உலகத்தில் தொலைக்காட்சி, செல்போன் ஆகியவை மட்டும்தான் பொழுது போக்குக்கான கருவிகள் எனப் பலரும் எண்ணுகின்றனர். இந்நிலையில், உடலையும் உள்ளத்தையும் தெம்புடன் வைத்திருக்க உதவும் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடும் மாணவர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளனர்.