சென்னை, காஞ்சிபுரம் உட்பட 10 மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைச் சார்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி, திட்டத்தை தொடக்கி வைத்தார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல், 27 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, முதற்கட்டமாக 1லட்சத்து 37 ஆயிரத்து 333 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், வளர்மதி, ராஜலட்சுமி, பாண்டியராஜன் உட்பட அரசு உயர் அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர். நடப்பாண்டில் 5 லட்சத்து 28 ஆயிரத்து 769 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்க 208 கோடியே 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.