புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் நாளை திறக்கப்படாது என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகளும், கல்லூரிகளும் நாளை திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். ஆனால், பள்ளி, கல்லூரிகள் திறப்பை ஒத்திவைக்குமாறு பெற்றோர், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் திறப்புக்கான முன்னேற்பாடுகள் செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார். கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அதன் பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். பள்ளி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான நிலை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் நமச்சிவாயம் அறிவுறுத்தினார்.