பள்ளி சுற்று சுவர் அருகே மாணவர்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் அமைப்பதுடன் அதனை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பள்ளியில் உள்ள கட்டடங்களின் மேற்கூரைகளின் உறுதி குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட வகுப்பறைகளைப் பயன்படுத்தாமல் பூட்டி வைப்பதுடன், அவற்றின் அருகே மாணவர்கள் செல்லாதவாறும் கண்காணிக்க வேண்டும் என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மின் இணைப்புகள் குறித்தும், தேவைப்பட்டால், மின் இணைப்பை தற்காலிகமாக துண்டிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளியை விட்டுச் செல்லும்போது பழுதடைந்த மின் கம்பிகளை தொடுவதோ அல்லது அருகில் செல்வதோ கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகளில் உள்ள நீர்தேக்க தொட்டிகளின் பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கையை பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும், நீர் நிலைகளின் அருகில் செல்வதை தவிர்க்க பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல, மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பின் உடனடியாக அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றும், கட்டடப் பராமரிப்புப் பணிகள் மற்றும் புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்த அறிவுரைகளை பின்பற்றி பள்ளிகள் இயங்குவதை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.