கனமழை காரணமாக 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக 2 மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் தமிழக கடலோரத்தை ஒட்டி வளிமண்டலத்தில் காணப்படும் மேலடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒருகிணைந்த வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை காரணமாக சென்னை பல்கலைகழகத்தின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைகழகத் துணைவேந்தர் அறிவித்துள்ளார். இதேபோல் அண்ணா பல்கலைக் கழகத் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை மற்றும் மேலூர் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. கடந்த 3 நாட்களாக கடுமையான வெயிலினால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்தநிலையில் திடீரென்று இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் உயரும் என மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகரில் இரவு முதல் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்சியான சூழல் நிழவுகிறது. மழையினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்து, பொதுமக்கள் அவதி அடைந்தநிலையில், இந்த மழையானது விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version