புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனங்களின் நிதியினை அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி அமைச்சர்களின் அலுவலகங்களில் செய்யப்படும் செலவினங்களுக்கு அமைச்சரவை செயலகங்கள் நிதி ஒதுக்கி அதன் அடிப்படையில் செலவு செய்யப்படுகிறது. ஆனால், வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் தனது அலுவலகத்திற்கு அரசு நிறுவனமான பிப்டிக் நிறுவன நிதியிலிருந்து எழுது பொருட்கள், நாற்காலிகள், மின் அடுப்பு உட்பட 3 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கு செலவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது இதேபோன்று சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தனது அலுவலகத்திற்கு தேனீர் செலவாக ரூ.15 ஆயிரத்து 980 ரூபாயை அரசு சார்பு நிறுவனமான பாட்கோவின் நிதியிலிருந்து செலவு செய்திருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. இது குறித்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் சார்பில் தகுந்த ஆதாரங்களுடன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட கிரண்பேடி, உரிய விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.