உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமின் மனு தள்ளுபடி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

2007 ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற்றதில் உள்ள விதிமீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருக்க அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவர் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் பெருந்தொகையை லஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறை தொடுத்த வழக்கில் முன்ஜாமின் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, முன்ஜாமின் வழங்குவது, வழக்கின் விசாரணையைப் பாதிக்கும் எனத் தெரிவித்த நீதிபதிகள் சிதம்பரத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தனர். பொருளாதாரக் குற்றங்கள் பல்வேறு வகைகளில் காலூன்றியுள்ளதால் அதை வெவ்வேறு அணுகுமுறையில் கையாள வேண்டியுள்ளதாகத் தெரிவித்தனர். விசாரணை நீதிமன்றத்தில் சிதம்பரம் ஜாமின் மனு தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

Exit mobile version