தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெறும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6ம் தேதி முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை வருகிற 2ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெறுமா? என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா வருகிற 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைப்பது குறித்து இதுவரை எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறிய அவர், வாக்கு எண்ணும் மையங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க இருப்பதாகவும் சத்யபிரதா சாகு கூறினார்.
வாக்கு எண்ணிக்கை போது ஊரடங்கு அமல்படுத்துவது குறித்தும், நோய் தடுப்பு வழிமுறைகளை மேற்கொள்வது குறித்தும், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருதாக சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.