சாத்தான்குளம் வழக்கு – 3வது நாளாக சிபிஐ விசாரணை!

சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமாரிடம் ஆலோசனை நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி, காவல் ஆய்வாளர் உட்பட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு, சிபிஐ-க்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா, தலைமையிலான குழுவினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே பென்னிக்ஸ்-ஜெயராஜ் வீடு, சாத்தான்குளம் காவல் நிலையம், அங்குள்ள லாக்கப் ரூம், காவல் நிலைய மேஜை, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்கள் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர், சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். சிபிஐயின் 3-ம் நாள் விசாரணை இன்று தொடங்கிய நிலையில், சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், நெல்லை வண்ணாரப்பேட்டை சுற்றுலா மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள சிபிஐ முகாம் அலுவலகத்திற்கு சென்று சிபிஐ அதிகாரிகளிடம் முக்கிய ஆவணங்களை ஒப்படைத்தார். அவருடன் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

Exit mobile version