வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் நடனக்கலைஞர்கள்!

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக மேடை நடன நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் நடனக்கலைஞர்கள்.கோவில் திருவிழா என்றாலே நடன நாட்டிய நிகழ்ச்சிகள் பெரும்பாலும் இடம்பெற்றுவிடும். பட்டி தொட்டி எங்கும் பண்டிகை காலம் என்றாலே நடன நாட்டிய நிகழ்ச்சிகள் அமோகமாக அரங்கேறும். ரஜினி, கமல், விஜய் , அஜித் என முன்னணி நட்சத்திர நடிகர்கள் நேரில் வந்து நடனமாடுவது போல கலைஞர்கள் வேடமணிந்து அசத்துவார்கள்.

அதேபோல் மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று வேடமிட்டு நடனமாடி அசத்துவார்கள். இந்த மேடைகளில் கலைஞர்கள் போடாத வேஷமே இல்லை என்று சொல்லலாம். நாட்டியம் ஆடி அசத்திய நடன கலைஞர்கள் தற்போது தங்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக கலை நிகழ்ச்சிகள் எதுவுமே நடத்தப்படவில்லை. திருவிழாக்கள் அனைத்தும் முடங்கி இருக்கின்றன. இதனால் வாழ்வாதாரம் இல்லாமல் வேறு வேலையைத் தேட தொடங்கிவிட்டனர் நடனக்கலைஞர்கள்.

தமிழகத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடனக் குழுக்கள் இருக்கின்றன. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நிரந்தர நடன கலைஞர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு முழுநேர தொழிலே நடனமாடுவது தான். கோவில் திருவிழா, திருமண விசேஷம், பிறந்தநாள் நிகழ்ச்சிகள் , காதுகுத்து, வளைகாப்பு, கட்சி பிரச்சார நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகளில் நடனமாடுவார்கள். ஆனால் இப்போது எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை இதனால் சில நடனக்கலைஞர்கள் சென்னையில் மீன் வியாபாரத்திற்கு சென்றிருக்கிறார்கள். சிலர் காய்கறி வியாபாரம் செய்கிறார்கள். ஒரு கலை நிகழ்ச்சிக்கு சென்றால் ஆயிரம் ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரை ஒரு நடனக்கலைஞர் சம்பாதிப்பார். ஆனால் இப்போதோ வீட்டிற்கு வாடகை செலுத்த கூட காசு இன்றி தவிக்கிறார்கள்.இதனால் அரசு தங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று நடனக்கலைஞர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் தங்களுக்கென ஒரு நலவாரியம் அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Exit mobile version