சசிகலாவின் சகோதரி மகன் வி.பாஸ்கரனுக்கு சொந்தமான நீலாங்கரை வீட்டை இடிக்க மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கம் முதல் உத்தண்டி வரையில் கிழக்கு கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன்படி, சென்னை நீலாங்கரை, ப்ளூ பீச் சாலையில் உள்ள சசிகலாவின் சகோதரி மகன் பாஸ்கரனுக்கு சொந்தமான கட்டிடம், விதிமீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, அதை இடிக்க கடந்த ஜனவரி 28-ம் தேதி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி பாஸ்கரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், மனுவுக்கு பதிலளிக்கும் படி தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.