சுய லாபத்திற்காக ஜெயலலிதா பெயருக்கு களங்கம் விளைவித்தவர் சசிகலா

சிறையிலிருந்து வெளியே வந்தாலும் சசிகலாவின் முயற்சிகள் தோற்று போகும் எனவும் அவர் சோர்ந்து விடுவார் எனவும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுய லாபத்திற்காக சசிகலா நடந்து கொண்டதால், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

மன்னார்குடி குடும்பத்தின் பாவத்தை சுமந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்றும், தனக்கென்று குடும்பம் இல்லாதவர், சொத்தைக் குவித்து என்ன செய்யப் போகிறார் என கூறிய வழக்கறிஞர் ஜோதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தங்கத் தாரகை மட்டுமல்ல, தங்கக் கம்பி எனவும் புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒண்டுக் குடித்தனத்தில் வசித்து, வந்த சசிகலா குடும்பத்திற்கு இவ்வளவு சொத்துகள் கிடைத்தது எப்படி எனக் கேள்வியெழுப்பினார். மேலும், சசிகலா குடும்பத்தின் அலட்சியத்தால் தான் ஜெயலலிதாவின் பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சசிகலா செய்த தவறுக்கு ஜெயலலிதா பொறுப்பேற்க வேண்டியதாயிற்று என கூறிய அவர், சசிகலா சிறையில் இருந்து வெளிவந்தாலும், அவரின் முயற்சி தோல்வியடைந்து, சோர்ந்துவிடுவார் என்றார்.

Exit mobile version