அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கப் பிரிவு, அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை பதிவு செய்தது. உடல் நலக்குறைவால் சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த இயலவில்லை என பெங்களூரு சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் சசிகலா விசாரணைக்கு ஆஜரானார்.
அப்போது சசிகலா மீதான 4 வழக்குகளில் 2 வழக்குகளை நீதிபதி படித்து காட்டினார். பெரும்பாலான கேள்விகளுக்கு தொடர்ந்து மழுப்பலாக சசிகலா பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இரண்டு வழக்குகளில் சசிகலா மீது குற்றச்சாட்டுப்பதிவு செய்வதாக உத்தரவிட்டார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அன்றைய தினமும் காணொலி காட்சி மூலம் சசிகலா ஆஜராக வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டார்.