சர்கார் படத்துக்கு எழுந்த எதிர்ப்பு காரணமாக காட்சிகள் ரத்தானதால், பல்வேறு திரையரங்குகள் வெறிச்சோடி காணப்பட்டன.
விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படத்தில் அரசின் திட்டங்களை விமர்சிக்கும் விதமாக காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அரசை விமர்சிக்கும் இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சர்கார் திரையிடப்படும் திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மதுரை, கோவை, சென்னை என அனைத்து மாவட்டங்களில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் காலை மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் காசி, உட்லாண்ட்ஸ், ஆல்பர்ட் உள்ளிட்ட திரையரங்குகளில் சர்கார் பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், திரையரங்குகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. காட்சி ரத்து செய்யப்பட்ட சில திரையரங்குகளில், டிக்கெட் பணம் திருப்பி கொடுக்கப்பட்டது.
சர்கார் படத்துக்கு எழுந்த எதிர்ப்பால், படத்தை வெளியிட திரையரங்குகள் மறுத்துவிட்டதாகவும், இதனால் பயந்துபோன சன் பிக்சர்ஸ் நிறுவனம், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.