சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராகாத கொல்கத்தா முன்னாள் ஆணையர் ராஜீவ் குமார், கூடுதல் அவகாசம் கோரி கடிதம் அனுப்பியுள்ளார்
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக விசாரணை நடத்த ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த 2013ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சிபிஐ, வழக்கின் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை ராஜீவ் குமார் அழித்துவிட்டதாகவும், சில முக்கிய ஆவணங்களை சிபிஐயிடம் இருந்து மறைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியது. இதுதொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக ராஜீவ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் நேரில் ஆஜராகாத அவர், சிபிஐ அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தாம் 3 நாட்கள் விடுமுறையில் இருப்பதால், சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராக முடியாத நிலையில் இருப்பதாகவும், ஆதலால் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.