ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றிய பெண் தனது அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் பஞ்சாயத்தில் அரசு ஊழியராக துப்புரவு பணி செய்து வந்த சரஸ்வதி என்ற பெண் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு கடந்த முறை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் கடந்த முறை அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் போனதால் தனது அரசு வேலையை பறிகொடுத்து தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் கான்சாபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சரஸ்வதி போட்டியிட்டார். நேற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கபடட் நிலையில் கான்சாபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சரஸ்வதி, ஆயிரத்து113 வாக்குகள் பெற்று 213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். அவருக்கு அப்பகுதி பொதுமக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.