இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்ஷா ஹோபார்ட் டென்னிஸ் போட்டியில் சாம்பியன்சிப் பட்டம் வென்றுள்ளார். காயம் மற்றும் குழந்தை பிறப்பிலிருந்து மீண்டு சாம்பியன் பட்டம் பெற்றுள்ள அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சர்வதேச அளவில் டென்னிஸ் போட்டிகளில் தனக்கென முத்திரை பதித்தவர் சானியா மிர்ஷா. 2003ம் ஆண்டிலிருந்து சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வரும் இவர் இதுவரை 42 டபுள்யூ.டி.ஏ பட்டங்களை வென்றுள்ளார். ஃபோர்ஹேண்ட் (forehand) ஷாட்டுகள் அடிப்பதில் கை தேர்ந்தவரான அவர், 2015 ம் ஆண்டு இரட்டையர் பிரிவின் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக வலம் வந்தார். ஒற்றையர் பிரிவுக்கான சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 30 இடங்களுக்கும் வந்த முதல் இந்திய வீராங்கனையும் இவரே.
டென்னிஸ் விளையாட தொடங்கிய காலத்திலிருந்து பல்வேறு விமர்சனங்களுக்கும் சானியா மிர்ஷா உள்ளானார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை கரம் பிடித்த இவர் காயம் காரணமாகவும் குழந்தை பிறந்ததன் காரணமாகவும் கடந்த 3 வருடங்களாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் விலகியிருந்தார்.
அறுவை சிகிச்சை மற்றும் உடல் ரீதியான மாற்றம் காரணமாக அவரது எடை 28 கிலோ வரை கூடியது. இதனால் மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பது சாத்தியமில்லை என கருதினார். இந்நிலையில் மீண்டும் ஆரம்பகட்டத்திலிருந்து பயிற்சியைத் துவங்கினார். உடல் ஒத்துழைத்த நிலையில் 2019ல் மீண்டும் டென்னிஸ் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டார்.
ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் டென்னிஸ் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை நடியா கிச்சனோக்குடன் இணைந்து விளையாடினார். இந்த ஜோடி அரை இறுதியில் செக் குடியரசின் மேரி பவுஸ்கோவா – தாமரா ஜிடான்செக் ஜோடியை நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இறுதிப்போட்டியில் சீனாவின் சாங் சுவாய் – பெங்க் சுவாயை வீழ்த்தி பட்டம் வென்றது.
வீனஸ் வில்லியம்ஸ், செரினா வில்லியம்ஸ், ரோஜர் பெடரர், ரபேல் நாடல் போன்ற உலகின் முன்னணி வீரர்கள் தங்களுடைய 30 வயதைக் கடந்த பின்னரும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். இவர்களைப் போல 33 வயதைக் கடந்த சானியா மிர்ஷா சாம்பியன் பட்டம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.