வீட்டுக்கே சென்று மணல் வழங்கும் திட்டம் – பொதுப்பணித்துறை அறிவிப்பு

அடுத்தாண்டு ஜனவரி முதல் வீட்டுக்கே சென்று மணல் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை வாங்குபவர்களுக்கு அவர்கள் வீடுகளுக்கே சென்று மணல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், எண்ணூர், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் சுமார் 100 கிலோமீட்டர் சுற்றளவில் முதற்கட்டமாக இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகளவில் மணல் தேவைப்படும், இதற்காக மாதம் ஒன்றுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன் வெளிநாட்டு மணல் இறக்குமதி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. TNSAND என்ற இணையதளத்தின் மூலம் ஒருவர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான அளவு உள்ளிட்டவற்றை கணக்கிட்டு மணல் வழங்கப்பட்டு வருகிறது.

வீடு தேடி வரும் மணல் திட்டம் மக்களிடையே வரவேற்பை பெறும் பட்சத்தில் இறக்குமதி அளவு அதிகரிக்கப்படும் என்றும், தற்போது வரை 56 ஆயிரத்து 750 மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுப்பணித்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version