உலக நன்மை வேண்டி சாலையில் விநோத பயணம் மேற்கொண்டுள்ள சாமியார்

உலக நன்மை வேண்டி வட மாநில சாமியார் ஒருவர் காசி முதல் இராமேஸ்வரம் வரை நூதன முறையில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள ஜோதி லிங்கங்களில் முக்கிய ஜோதிலிங்கமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உள்ளது. தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பாரத்தாஸ் என்ற சாமியார் ஒருவர் உலக நன்மை வேண்டி ராமேஸ்வரத்திற்கு நூதன பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்தாண்டு பிப்ரவரி 14ம் தேதி உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஆசிரமத்தில் இருந்து ராமநாத சுவாமியை தரிசனம் செய்ய பயணம் மேற்கொண்டார். சுமார் 2500 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலையில் நூதன முறையில் படுத்து எழுந்து, படுத்து எழுந்து பயணித்து வருகிறார். இவருக்கு உதவியாக உதவியாளர் ஒருவர் பஞ்சு படுக்கை ஒன்றை கயிற்றில் கட்டி இழுத்து வருகிறார். தற்போது இவர் ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தை வந்தடைந்தார். சாமியாரின் நூதன முறை ஆன்மீக பயணத்தை சாலையில் வாகனத்தில் செல்வோர் வாகனத்தை நிறுத்திவிட்டு வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

Exit mobile version