ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து காந்தியடிகள் தண்டி யாத்திரை மேற்கொள்ளப்பட்ட தினம் இன்று. ஆங்கிலேய அரசு உப்புக்கு வரி விதித்திருந்த காலகட்டம் அது. அதனை காந்தியடிகள் எதிர்த்து 1930 ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி தன்னுடைய சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தொண்டர்களுடன் தண்டி நோக்கிப் புறப்பட்டார். தற்போது அதன் 93வது ஆண்டு இது ஆகும். மார்ச் 12 ஆம் தேதி சபர்மதியிலிருந்து நடக்கத் துவங்கிய காந்தியடிகள், 23 நாள்கள் 240 மைல் நடந்து சென்றார். பிற்கு தண்டியை அடைந்த அவர், ஏப்ரல் 6 1930 இல் உப்புச் சட்டங்களை மீறி கைதானார். இது இந்திய விடுதலை இயக்கப் போராட்டத்தின் முக்கியமான திருப்புமுனைப் போராட்டமாக அமைந்தது. இந்த சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டவர்களில் சரோஜினி நாயுடுவும் ஒருவர். பிற்காலத்தில் இந்தியாவின் நைட்டிங் கேள் என்றும் அழைக்கப்பட்டார்.
இதனை உப்பு சத்தியாகிரகம் என்று சொல்வதைவிட தண்டி யாத்திரை என்று சொன்னாலே பலருக்கு தெரியும். 10,000 மேற்பட்டவர்கள் இந்த நடைபயணத்தில் கலந்துகொண்டனர். நடந்து கொண்டிருக்கும் போதே ‘ரகுபதி ராகவ ராஜா ராம்’ என்கிற பாடலைப் பாடியவாரே நடந்தனர். நடைபயணத்தின் போது ஒவ்வொரு கிராமங்களிலும் நுழைந்த காந்தியடிகள் இது ஏழை மனித்னின் போர் என்று கூறி மக்களை ஒன்று திரட்டினார். ஆங்கிலேயர் கொண்டு வந்த ரெளலட் சட்டமானது இந்தியாவில் யாரும் சட்டத்தை மீறி உப்பு அள்ளுவது கூடாது என்று சொல்லப்பட்டது. ஆங்கிலேயரின் இந்த முற்றுரிமை வணிக அரசியலை தகர்க்க காந்தியடிகளின் நுட்பமிக்க செயலே இந்த சத்தியாகிரகம். ஒரு மனிதனை நம்பி ஒரு நாடே ஒன்றிணைந்தது. சுதந்திரப் போராட்டத்தில் சிதறுண்டு கிடந்த போராட்டக்காரர்கள் அறவழியில் ஒரு குடையின் கீழ் ஒன்று திரள காரணமானவர் காந்தியடிகளே.