சேலம் ரயிலில் கொள்ளையடிக்கப்பட்டதில் 2 கோடி ரூபாயை கிழித்து வீசி தீயிட்டு எரித்து விட்டதாக கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்.
2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி சேலத்திலிருந்து சென்னை வந்த எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பழைய ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டன. இதில், ஐந்தே முக்கால் கோடி ரூபாய் கொள்ளைபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சினிமாவை மிஞ்சும் வகையில் ஓடும் ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், பிடிக்கப்பட்ட வடமாநில கொள்ளையர்களை, விருத்தாசலம் உள்ளிட்ட ரயில் வழித்தடங்களுக்கு சிபிசிஐடி போலீசார் அழைத்துச் சென்றனர். கொள்ளையை அரங்கேற்றியது குறித்து அவர்கள் நடித்து காண்பித்தனர்.
இதனிடையே, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், செல்லாமல் போன 2 கோடி ரூபாய் தாள்களை தீயில் எரித்து விட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே, நாளையுடன் அவர்களுக்கான போலீஸ் காவல் முடிவடையும் நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.