சேலம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த தூய்மை பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 3 பேர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மோகன்குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் துப்புரவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஒப்பந்ததாரர் மாற்றப்பட்டதால் ஏற்கனவே பணியில் இருந்தவர்களை நீக்கி புதிய நபர்களை பணியமர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு அவர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களை உடனடியாக தடுத்து நிறுத்தி காவல்நிலையம் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில், தங்களை மீண்டும் பணியமர்த்த லஞ்சம் கேட்டு இழிவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை கோரிய அவர்கள், தங்களுக்கு பணியை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.