நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் வலதுகரையில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடெங்கிலும் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், சேலம் மாவட்ட பயிற்சி ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டூர் அணையின் வலது கரையில் 500க்கும் மேற்பட்ட அரசு கல்லூரி மாணவ, மாணவியர் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட வண்ண பலூன்களை பறக்கவிட்டனர். அடுத்ததாக நீர்த்தேக்கப் பகுதியில் விசைப்படகுகளில் பயணம் செய்து வந்தனா கார்க் மற்றும் அதிகாரிகள் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர். மேலும் மேட்டூர் அணையின் பூங்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி பெண் ஊழியர்கள் மத்தியில் வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது.