போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ரோபோட்டை பயன்படுத்தும் நவீன தொழில் நுட்பத்தில் சேலம் மாநகர காவல்துறை தடம் பதித்துள்ளது. அதைப்பற்றிய செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்…
மனிதனின் கண்டுபிடிப்புகளின் தேடல்களில் எல்லையாக இருக்கும் ரோபோக்கள்… மனிதன் கேட்கும் கேள்விகளை புரிந்து கொண்டு பதிலளிக்கும் ரோபோ, மருத்துவதுறையில் மனிதனுக்கு இணையாக சேவையாற்றும் ரோபோ, வரவேற்பரையில் புன்முகத்துடன் வரவேற்கும் ரோபோ, தொழிற்சாலைகள், உணவகங்களில் பணியாளராக ரோபோ என அனைத்து துறைகளிலும் பங்காற்றி மனிதனின் உற்ற தோழனாக ரோபோக்கள் திகழ்ந்து வருகின்றன. ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் ரோபோக்களின் பங்கு மிகப்பெரிய அளவில் உருவெடுத்து நிற்கிறது.
அந்த வகையில் தமிழகத்திலும் பல்வேறு துறைகளில் கால்பதித்து வரும் ரோபோக்கள், தற்போது போக்குவரத்து துறையில் காவலர்களுக்கு உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மழை, வெயில் போன்ற காலங்களில் போக்குவரத்து காவலர்களுக்கு உதவும் வகையில் இந்த ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் சியாமளாதேவி தெரிவித்தார். திருட்டு வாகனங்களை் இந்த ரோபோக்கள் எளிதில் கண்டுபிடிக்கும் விதமாக புரோகிராம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த ரோபோ ரிமோட்டால் இயங்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது என்று வடிவமைப்பாளர் கார்த்திக் தெரிவித்தார். இதன் செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து ரோபோவை இயக்கலாம் எனவும் அவர் கூறினார்.
போக்குவரத்து துறைக்கு பயன்படும் வகையில் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் சேலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. நவீன தொழில்நுட்ப உதவியுடன் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்தும் அரசிற்கு தங்களது பாராட்டுக்களை பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.