சேலம் அருகே பேக்கரி ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் அளவிலான தரமற்ற குடிநீர் பாட்டில்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
அயோத்தியாபட்டினம், அடுத்துள்ள மின்னாம்பள்ளி பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் சொந்தமாக பேக்கரி நடத்தி வருகிறார். நிலவாரப்பட்டி பகுதியில் உள்ள தனியார் குடிநீர் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து, கடந்த மாதம் இவர் வாங்கிய குடிநீர் பாட்டில்கள் அடுத்த சில நாட்களிலேயே கெட்டுப்போனதாக தெரிகிறது. இதுதொடர்பாக, சுரேஷ்குமார் உணவு பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் குடிநீர் பாட்டில்களை ஆய்வு செய்தனர். அப்போது, அவைகள் தரமற்றதாகக் கண்டறியப்பட்டதால், 600 லிட்டர் அளவிலான குடிநீர் பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனை, விற்பனை செய்யவும் தடை விதித்தனர். மேலும், குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் ஆய்வு அறிக்கை வந்தபின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.