சேலம், திருத்தணியில் தலா 105 டிகிரி வெப்பநிலை பதிவாகியது

தமிழகத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சேலம், திருத்தணி உள்ளிட்ட 10 இடங்களில் வெயில் நேற்று சதமடித்துள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் மார்ச் முதல் வாரத்திலிருந்தே வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் சேலம், தருமபுரி, திருத்தணி, வேலூர், கோவை விமானநிலையம், கரூர், நாமக்கல், சென்னை மீனம்பாக்கம், திருச்சி, மதுரை விமானநிலையம் ஆகிய பகுதிகளில் நேற்று 100 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக சேலம் மற்றும் திருத்தணியில் தலா 105 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில், பூமத்திய ரேகையை கடந்து சூரியன், வடக்கு அட்சரேகையை நோக்கி நகர்வதால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெப்பநிலை உயர்ந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், உள் தமிழகத்தின் சில இடங்களில் வழக்கத்தைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளனர். குறிப்பாக, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் வழக்கத்தை விட வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version