சுதந்திர தினத்தை முன்னிட்டு சூடுபிடித்த தேசியக் கொடிகளின் விற்பனை

சுதந்திர தினத்தை முன்னிட்டுத் திருப்பூரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ள தேசியக் கொடிகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

தமிழகத்தில், சுற்றுச்சூழல் மாசுபடாமல் காக்கும் வகையில், ஜனவரி மாதம் முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் தெருக்களில் தோரணமாகக் கட்டவும், வீடுகளில், வாகனங்களில் பொருத்தவும், நெகிழியால் ஆன தேசியக் கொடிகள் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டு வந்தன. இந்த ஆண்டு நெகிழிப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், திருப்பூரில் நெகிழிப் பொருட்களைத் தவிர்த்து, மற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகள் விற்பனைக்கு வந்துள்ளன. வழக்கமாகச் சட்டைகளில் அணியும் காகிதக் கொடிகளுடன், தற்போது ஸ்டிக்கர் வகையில் பல வடிவங்களில் தேசியக் கொடிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தேசியத் தலைவர்களின் படம் பொறிக்கப்பட்ட தோரணம், தொப்பி ஆகியனவும் விற்பனைக்கு வந்துள்ளன. சட்டையில் அணியும் கொடிகள், வாகனங்களில் பொருத்தும் வகையிலான கொடிகள், மேசைகளில் வைக்கும் வகையிலான கொடிகளும் உள்ளன. வகைவகையான தேசியக் கொடிகளை தயாரித்துவரும் குமார் என்பவர், சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் நெகிழியில்லாப் பொருட்களால் தேசியக் கொடி தயாரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

Exit mobile version