பேட்மிண்டன் விளையாட்டில் முன்னாள், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சாய்னா நேவால், ஹரியானா மாநிலத்தின், ஹிசார் நகரில், 1990 மார்ச் 17ல் பிறந்தார். தாய், தந்தை இருவருமே இளம் வயதில் தேசிய அளவில் பேட்மிண்டனில் ஜொலித்தவர்கள். பெண் குழந்தை பிறந்துவிட்டதே என சாய்னாவின் பாட்டிக்கு ஏகத்துக்கும் வருத்தம். அதனால், தமது மகளை ஆண் பிள்ளை போல தைரியமாக வளர்க்க எண்ணி முதலில் கராத்தே கற்றுக்கொள்ள அனுப்பினார் அம்மா உஷா ராணி.
கராத்தேவில் பிரவுன் பெல்ட் தகுதி பெற்ற சாய்னா, எட்டாவது வயதில் பேட்மிண்டன் மட்டையைக் கையில் எடுத்தார். வேளாண் துறை அதிகாரியாக இருந்த சாய்னாவின் தந்தை ஹர்விர் சிங், சாய்னா சிறு வயதாக இருக்கும் போதே, ஐதராபாத் நகருக்கு பணி மாறுதலாக வந்தார். அன்று முதல், அங்குள்ள சிறந்த விளையாட்டு மைதானங்களில், சாய்னா பயிற்சி மேற்கொண்டார். 14 வயதில் தேசிய ஜூனியர் சாம்பியன் பட்டம் வாங்கி, பேட்மிண்டன் ரசிகர்களின் மனதினை கவர்ந்தார். காமன்வெல்த் போட்டிகளில் சுட்டி பெண்ணாகக் கலந்துகொண்டு முழு அணியையும் ஊக்குவித்து, வெள்ளிப் பதக்கம் வென்றார்.ஒற்றையர் பிரிவில் வெண்கலம் கிடைத்தது.
ஒலிம்பிக்கில் கால் இறுதி வரை சென்ற முதல் இந்திய வீராங்கனை இவர்தான். உலகின் மிகக் கடினமான மூன்று சூப்பர் சீரீஸ் பட்டங்களைத் தொடர்ந்து வென்றார். அப்போது இவரின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்து ‘ஒரு பேரனால்கூட இவ்வளவு பெருமை வந்து இருக்காது’ என இவரது பாட்டி சொன்னபோது கண் கலங்கி போனார் சாய்னா. இந்தியாவின் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பெறும் மிக உயரிய விருதான ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருதை இவர் பெற்றபோது, வயது 19 மட்டுமே.
இதுவரை, சர்வதேச அளவில், 24 பட்டங்களை வென்றுள்ள சாய்னா , 2015ல் தர வரிசையில், உலகின் முதல் நிலை வீராங்கனை ஆனார். இதன் மூலம், இந்த பட்டத்தை வென்ற, இந்தியாவின் முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இவர், சக வீரர் பாருபள்ளி காசியப்பை, 2018ஆண்டு டிசம்பரில் மணந்தார். தற்போது, பா.ஜ.,வில் இணைந்துள்ள சாய்னா நேவாலுடன் பிறந்தது, ஒரே மூத்த சகோதரி மட்டுமே. அமைதியாகி பேசி ஆட்டத்தில் அசுரப் பாய்ச்சல் காட்டும் இந்திய பேட்மிண்டன் விளையாட்டு உலகின், நம்பிக்கை நட்சத்தித்தின் பிறந்த நாள் இன்று.