தைப்பூசத் திருநாளையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாய்மரப் படகு போட்டி சிறப்பாக நடத்தப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த வடக்கு புதுக்குடி மீனவ கிராமத்தில் ஆண்டுதோறும் தைப்பூச திருநாளில் பாய்மர படகுப் போட்டி நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு நடைபெற்ற போட்டியில் பொன்னாகரம், வடக்கு புதுக்குடி, கிருஷ்ணாஜி பட்டிணம், ஆர் புதுப்பட்டிணம், பிஆர் பட்டிணம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களிலிருந்து 15 பாய்மரப் படகுகள் போட்டியில் பங்கேற்றன. போட்டிக்கென முன்பதிவு செய்யப்பட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட படகுகள் போட்டியில் பங்கேற்றன. போட்டிக்கான தூரம் 14 கிலோ மீட்டர் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
ஒரு படகிற்கு 6 நபர்கள் வீதம் 90 பேர் போட்டியில் கலந்துகொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த படகுகளுக்கு முறையே, 25 ஆயிரம், 20 ஆயிரம், 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் நினைவு கேடயங்கள் கொடுத்து கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியை அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.