கொடநாடு விவகாரத்தில் பின்னணி என்ன என்பதை தமிழக அரசு உடனே விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் வலியுறுத்தியுள்ளார். கொடநாடு விவகாரத்தில் 2017ஆம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு பல மாதங்கள் கழித்து, குற்றவாளிகள் 2 பேர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். சயன் என்பவர் கூறியுள்ள கூற்று, ஏற்புடையது கிடையாது என்று தெரிவித்துள்ள ஞானதேசிகன், அரசியல் பரபரப்பிற்கு எவ்வாறு வேண்டுமானாலும் சொல்லலாம் என்று கூறியுள்ளார்.
மிகப்பெரிய அதிகாரத்தில் உள்ளவர்கள் மீது, போகிற போக்கில் சேற்றை வாரி பூசுவதை அனுமதிக்க கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே இதன் பின்னணியை தமிழக அரசு உடனடியாக ஆராய்வதோடு, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க வேண்டும் என்று ஞானதேசிகன் வலியுறுத்தியுள்ளார்.