ஈரான் அனுப்பிய ஸாஃபர் செயற்கைகோள், புவியின் சுற்றுவட்டப் பாதையை அடைவதற்கு முன் செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட ஸாஃபர் செயற்கைகோளை, அந்நாட்டு நேரப்படி மாலை 7.30 மணியளவில் தலைநகர் டெஹ்ரானுக்கு அருகில் உள்ள இமாம் கொமெய்னி ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.
விண்ணில் செலுத்தப்பட்டதை அடுத்து, முதல் 2 கட்டங்களை வெற்றிகரமாக கடந்த ஸாஃபர் செயற்கைகோள், ஆர்பிட்டரில் நிலை நிறுத்தும் போது செயலிழந்துள்ளது. ஆர்பிட்டரில் நிலை நிறுத்த, குறிப்பிட்ட வேகத்திற்கும் அதிகமாக செயற்கை கோளை செலுத்தியதால் செயற்கைகோள் செயலிழந்ததாக கூறப்படும் நிலையில், ஸாஃபர் செயற்கை கோள் தோல்வியடைந்துள்ளதாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஸாபர் செயற்கைகோள் முயற்சி தொடரும் என அந்நாட்டு தகவல் தொடர்புதுறை அமைச்சர் முகமது ஜாவித் அஸாரி, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஸாஃபர் செயற்கை கோளின் மறுபதிப்பு வரும் ஜூலை மாதம் ஏவப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.