சபரி நாதன்
சென்னையில் வசித்துவரும் 29 வயதான கவிஞர் சபரிநாதனின் வால் கவிதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாடமியின் ‘யுவ புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. கவிதை, மொழிபெயர்ப்புகள், திறனாய்வுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து எழுதிவரும் சபரிநாதன் சென்னை அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். 2016ஆம் ஆண்டில் வெளியானது சபரிநாதனின் ‘வால்’ கவிதைத் தொகுப்பு. முன்னதாக 2011ஆம் ஆண்டில் களம் காலம் ஆட்டம் என்ற கவிதைத் தொகுப்பையும் இவர் வெளியிட்டு உள்ளார்.
2010ல் ஸ்காண்டிநேவியக் கவிஞர் தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமரின் கவிதைகளை உறைபனிக்குக் கீழே என்ற பெயரில் மொழி பெயர்த்தவர். முன்னதாக 2017ல் விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருதையும், 2015 மற்றும் 2011ல் இளம் கவிஞர்களுக்கான விகடன் விருதையும் வென்றவர் சபரிநாதன்.
தேவி நாச்சியப்பன்
சாகித்ய அகாடமியின் குழந்தை இலக்கியத்திற்கான பால புரஸ்கார் விருதைப் பெறுகிறார் கவிஞர் தேவி நாச்சியப்பன். இவரது இயற்பெயர் வ.தெய்வானை என்பதாகும். தற்போது சென்னையில் வசித்துவரும் தேவி நாச்சியப்பன் கடந்த 1988ஆம் ஆண்டில் இருந்து எழுதி வருகிறார். பந்தும் பாப்பாவும், புத்தகத் திருவிழா, பசுமைப் படை – உள்ளிட்ட பல குழந்தை இலக்கிய நூல்களை எழுதி உள்ளார். தேவி நாச்சியப்பனின் ஒட்டுமொத்த பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு பால புரஸ்கார் விருது வழங்கப்படுவதாக சாகித்ய அகாடமி அறிவிப்பு.
மறைந்த குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் மகளான இவர் தனது தந்தையைக் குறித்து நினைவில் வாழும் குழந்தைக் கவிஞர் என்ற நூலையும் எழுதி உள்ளார். கடந்த 2018ல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இவருக்கு சிவகங்கை மாவட்டத்திற்கான தமிழ்ச் செம்மல் விருதை வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.