சபரிமலையில் இதேநிலை நீடித்தால், உயிரிழப்பு ஏற்படக்கூடும் என்று சபரிமலை சிறப்பு ஆணையர் மனோஜ், கேரள உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து காணப்படுகிறது.
அடுத்த மாதம் மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலையில் நடை திறக்கப்பட உள்ள நிலையில், சபரிமலை சிறப்பு ஆணையர் மனோஜ் கேரள உயர் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், மண்டல சீசனின் போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
பக்தர்கள் மற்றும் போராட்டக்காரர்களால் மீண்டும் போராட்டம் நடந்தால், நெருக்கடியான நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள், போலீஸார் மற்றும் பலர் காயமடைவதுடன், உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக மனோஜ் எச்சரித்துள்ளார். போராட்டம் வலுத்தால், பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் ஏற்படும் என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.