இன்று சூரிய கிரகணத்தை முன்னிட்டு அடைக்கப்பட்ட சபரிமலை கோயில் நடை, 4 மணி நேரத்திற்கு பிறகு திறக்கப்பட்டது.
மண்டல பூஜை, படி பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை திருவிழாவுக்காக, கடந்த நவம்பர் 16ஆம் தேதியன்று, சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதான நடை திறக்கப்பட்டது. அன்றிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டு, பதினெட்டாம் படியேறி, சபரிமலை ஐயப்பனை தரிசித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், இன்று வளைய சூரிய கிரகணம் என்னும் அரிய சூரிய கிரகண நிகழ்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 4 மணி நேரம் வரை சபரிமலை நடை அடைக்கப்பட்டது. வழக்கம் போல், அதிகாலை 3 மணிக்கு, நடை திறக்கப்பட்டு, காலை 6.45 மணி வரையில், நெய் அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, காலை 7.30 மணிக்கு பூஜை நடைபெற்ற பிறகு, 4 மணி நேரம் நடை அடைக்கப்பட்டது. பின்னர், நண்பகல் 12 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. அதன் பின்பு பரிகார பூஜைகளும், கலசாபிஷேகமும் நடத்தப்பட்டது.