சபரிமலை சீசன் தொடக்கம்: முதல் நாளிலேயே இருமுடி கட்டுடன் குவிந்த பக்தர்கள்

கார்த்திகை மாதம் தொடங்கியதை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து வழிபட்டு வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டுச் சனிக்கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குச் சென்று வழிபட்டனர். கார்த்திகை மாதத்தின் முதல்நாளான இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டனர். இருமுடி கட்டிக்கொண்டு சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் என முழக்கமிட்டபடி பக்தர்கள் கால்நடையாக நடந்து கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.

இந்நிலையில் சபரிமலை வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட விரிவான அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்துக் கோவிலில் வழிபடுவதற்காக 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் வந்தால் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாது என மாநில அரசு தெரிவித்துள்ளது. 50 வயதுக்குட்பட்ட பெண்கள் வந்தால் அவர்களைத் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்புவதற்காகப் பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். கோவிலிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version