சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் சூடு தணியாத நிலையில் கோவில் நடை இன்று மாலை சாத்தப்படுகிறது.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதையடுத்து இந்த உத்தரவை அமல்படுத்த மாநில அரசு முடிவெடுத்தபோது கடும் எதிர்ப்பு எழுந்தது. நூற்றாண்டு கால பாரம்பரியத்தை சிதைக்க நினைப்பதா என பக்தர்கள் கொந்தளித்தனர். இந்த நிலையில் கடந்த 17 ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாள் முதல் தினந்தோறும் சபரிமலையில் பதற்றம் நிலவி வந்தது.
பெண்ணிய வாதிகள் சிலரை அரசு, கோவிலுக்குள் அனுமதிக்க முயன்ற போது பக்தர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.அப்படி வந்தவர்களை ஆண் பக்தர்கள் திருப்பி அனுப்பினர். இதையடுத்து சபரிமலை பகுதியில் இருந்தவர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். மேலும் நிலக்கல்,பம்பை உள்ளிட்ட 4 இடங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டது.
இதனிடையே தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்யப்போவதாக கேரள பிராமணர் சங்கம் அறிவித்தது. கோவிலை மூடுவோம் என பந்தள மன்னர் குடும்பம் அறிவிக்க, நிலைமை மேலும் சிக்கலானது. இதனால் சற்று இறங்கி வந்த தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், சபரிமலையில் நடக்கும் சம்பவங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க போவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் நேற்றும் 4 பெண்கள் சபாரிமலை கோவிலுக்குள் நுழைய முயன்றனர். பின்னர் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அதில் ஒரு பெண் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இதனிடையே இந்த விவகாரத்தில் பாஜகவும்,ஆர்.எஸ்.எஸ் அரசியல் செய்வதாக மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டினார். மேலும் சன்னிதானத்தில் போராட்டம் நடத்தியதாக 200 பேர் மீது வழக்கு பதிவானது.
இதனால் இந்த விவகாரம் தொடர்ந்து சூடு குறையாமல் இருந்தது. இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட கோவில் நடை, நாளை சாத்தப்பட உள்ளது. கோவில் நடை சாத்தப்பட்டு விட்டால் தற்போதைய பரபரப்பு அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.