சபரிமலை அய்யப்பன் கோயில் சாமி தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இது நீண்டகால ஐதீகமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சாமி தரிசனம் செய்ய பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, 2018 செப்டம்பர் 28ஆம் தேதி சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களும் அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பாஜக, இந்து அமைப்புகள் மாபெரும் போராட்டம் நடத்தின. தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி 56 சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் பாலி நரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில், பெண்கள் உரிமை மற்றும் மத உரிமைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் சபரிமலை வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தனர். இதையடுத்து, சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.