சபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு: பாதுகாப்பு பணியில் 10,000 காவலர்கள்

சபரிமலை கோயில் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கவுள்ளதால், 10 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாமல் உள்ள ஐதீகத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வயது வித்தியாசம் இன்றி அனைத்து பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களில் குதித்தனர். சபரிமலை கோயிலில் அனைத்து பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி கேரளாவை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மனுத்தாக்கல் செய்து இருந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது. தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சபரிமலை கோயில் முழுவதும் 10 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்..

இதே போல், ரபேல் போர் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்டு வழக்கு மற்றும் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கு ஆகிய வழக்குகளுக்கும் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க இருக்கிறது.

Exit mobile version