சபரிமலையில் மாசி மாத பூஜைக்காக கோயில் நடை இன்று திறக்கப்பட்டது.
மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி மாலை 5 மணிக்கு கோயில் நடையை திறந்து வைத்தார். மாசி மாத பூஜைக்காக வரும் 17ஆம் தேதி வரை சபரிமலை கோயிலில் நடை திறந்திருக்கும். அன்று இரவு 10 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் அந்த தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த தீர்ப்புக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. கடந்த முறை பிந்து, கனக துர்கா ஆகிய இரு பெண்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து இந்த முறையும் சபரிமலைக்கு பெண்கள் வரலாம் என்பதால் பாதுகாப்புக்காக 3 காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.