சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கேரளாவில் அசாதாரண சூழ்நிலை காணப்படுகிறது. மறுசீராய்வு மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களை தடுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், அங்கு அதிக அளவிலான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை 5 மணியளவில் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி காலை 10 மணியளவில் பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு அனுப்பப்படுகின்றனர். இன்று மாலை நடை திறந்தபின்பு சிறப்பு பூஜைகள் எதுவும் நடத்தப்படாது. நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு நெய்யபிஷேகம் நடைபெறுகிறது.

தினமும் இரவு 7 மணியளவில் படிபூஜையும் நடத்தப்படுகிறது. இதையடுத்து வரும் 17-ம் தேதி இரவு 10 மணியளவில் நடை அடைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடை திறப்பையொட்டி அங்கு ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version