ஒயிட் லேம்ப் புரொடக்சன் சார்பில் ஆண்டனி சாமி, எஸ்.பி. ராமநாதன் இணைந்து தயாரித்துள்ள சாயம் திரைப்படத்தை ஆண்டனி சாமி இயக்கியுள்ளார்.
சிவகங்கை பகுதியான தேவகோட்டையில், ஜாதி வேற்றுமை இல்லாமல் அனைவரும் ஒன்னும் மண்ணுமாக பழகி வருகிறார்கள். ஊர்த் தலைவர்களான பொன்வண்ணன், இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் யாரிடமும் ஜாதி வேறுபாடு வந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
ஆனால், ஊர் மக்களிடம் ஜாதி வெறியைத் தூண்டும் வில்லன் காசி, அனைவரிடத்திலும் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். வில்லனின் இந்த சூழ்ச்சிக்கு, நாயகன் அபி சரவணன் இரையாகிறார்.
ஜாதி எனும் சாயம் பூசப்பட்டு தனது வாழ்வை இழக்கும் அபி சரவணன், அதிலிருந்து மனம் திருந்தி எப்படி மீண்டு வருகிறார் என்பதே படத்தின் கதை.
படிக்கும் காலத்திலேயே மாணவர்களிடம் ஜாதி உணர்வு புகுத்தப்பட்டால், அது அவர்களது எதிர்கால வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்ற பின்னணியில் உருவாகியுள்ளது ‘சாயம்’.
ஆனால், அதை படமாக்கிய விதத்தில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்து, திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யம் கூட்டியிருத்தால், ரசிகர்களிடையே நீங்கா சாயமாக படிந்திருக்கும் இந்த ‘சாயம்.’
பொன்வண்ணன், இளவரசு, போஸ் வெங்கட், சீதா போன்ற மூத்த நடிகர்கள், தங்களுடைய அனுபவ நடிப்பால் படத்தை தாங்கிப் பிடிக்கின்றனர்.
நாயகன் அபி சரவணனும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாகச் செய்துள்ளனர்.