உச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே இன்று பதவியேற்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ரஞ்சன் கோகோய் ஓய்வுபெற்ற நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்கவிருக்கிறார். மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியைச் சோர்ந்த பாப்டே, வழக்கறிஞர்கள் குடும்பத்திலிருந்து வந்தவர். நாகபுரி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்த எஸ்.ஏ.பாப்டே, கடந்த 1978ல் மகாராஷ்டிரா வழக்கறிஞர் சங்கத்தில் பதிவு செய்தார். மும்பை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்து, பின்னர் 2000ம் ஆண்டில் கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார். 2012ல் மத்தியப் பிரதேச தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 2013ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். தற்போது 47வது தலைமை நீதிபதியாக பதவியேற்கும் எஸ்.ஏ.பாப்டே, 2021, ஏப்ரல் 23ம் தேதி வரை அப்பதவியை வகிப்பார். சுமார் 17 மாதங்கள் அவர் தலைமை நீதிபதியாக செயல்பட உள்ளார்.