பல கோடி இதயங்களுக்கு பாடல்கள் மூலம் மருந்தளித்த இசை உலகின் பிதாமகன் எஸ்பிபியின் பிறந்த நாள் இன்று..
1946 ஆம் ஆண்டு நெல்லூர் மாவட்டத்தில் பிறந்த ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம், இந்திய பிரபல பின்னணி பாடகராக அரைநூற்றாண்டுகளுக்கு மேலாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 1966ம் ஆண்டு திரையுலகில் தனது முதல் பாடலை பாடிய அவர், அன்று முதல் 40ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை பெற்ற எஸ். பி. பி., முறையாக கர்நாடகா இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்கு பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் தான்.
தமிழில் மின்சார கனவு படத்தில் தங்கத்தாமரை மகளே என்ற பாடல் மூலம் தனது காதலியை நினைத்து வர்ணித்து பார்க்காத காதலனே இருக்க முடியாது என்ற அளவுக்கு, பட்டிதொட்டியெங்கும் சென்றடைந்து, தேசிய விருதையும் பெற்றார் எஸ் பி பி. கொடுத்ததை அப்படியே பாடுபவர் அல்ல எஸ்.பி.பி. சின்னச் சின்ன திருத்தங்கள் மூலம் பாடலை செழுமைப்படுத்தும் மந்திரவாதி அவர்.
எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார். மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களை ஒரேநாளிலும், இந்தியில் 16 பாடல்களை 6மணி நேரத்தில் பாடியும் சாதனை படைத்துள்ளார். இந்த இசை பிதாமகனை கௌரவிக்கும் பொருட்டு, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆந்திரமாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டார்.
எஸ்.பி.பியை எல்லோருக்கும் பிடிக்கக் காரணமே அவரின் எளிமைதான். எவ்வளவு உயரங்கள் போனாலும் சிகரங்கள் தொட்டாலும் அவர் எல்லோரிடத்திலும் அன்பாகவே இருக்கிறார். எளிதில் அணுகும் மனிதராக இருக்கிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் எவ்வளவு வற்புறுத்தினாலும் அவர் யாரையும் திட்ட மாட்டார். “ஏன் திட்டணும்… முடிந்த அளவு பாசிட்டிவிட்டியை விதைப்போமே?” என்பார்.