திருச்சியில் ரெம்டெசிவிர் மருந்துக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தும், மருந்து கிடைக்காததால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி இயன்முறை மருத்துவக் கல்லூரியில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் மற்றும் சிடி ஸ்கேன் அறிக்கையுடன் வரும் நபர்களுக்கு, 6 குப்பிகள் அடங்கிய ரெம்டெசிவிர் 9 ஆயிரத்து 408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தினமும் 300 பேருக்கு ரெம்டெசிவிர் மருந்துக் குப்பிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 50 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டதால் வரிசையில் நின்றவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதையடுத்து மருத்துவமனையை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், வரிசையில் நின்ற அனைவருக்கும் மருந்து விநியோகிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இரண்டு நாட்களாக காத்திருந்தும் தனக்கு ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கவில்லை என்றும், இந்த மருந்து கிடைத்தால் மட்டுமே தனது கணவரைக் காப்பாற்ற முடியும் என பெண் ஒருவர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்