தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் மாவட்ட, ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரு கட்டமாக தேர்தல் நடந்தது. 515 மாவட்ட கவுன்சிலர், 5ஆயிரத்து 90 ஒன்றிய கவுன்சிலர் உள்பட தமிழகம் முழுவதும் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. கடந்த 2 மற்றும் 3ம் தேதிகளில் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்தது. தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியிட்டது. அதன்படி, 515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 513 இடங்களுக்கான முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில் அதிமுக 214 மாவட்ட கவுன்சிலர் இடங்களையும், திமுக 243 மாவட்ட கவுன்சிலர் இடங்களையும் கைப்பற்றியது. 5ஆயிரத்து 90 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 5ஆயிரத்து 85 இடங்களுக்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில், அதிமுக ஆயிரத்து 781 இடங்களையும், திமுக 2ஆயிரத்து 99 இடங்களையும் கைப்பற்றியது. வெற்றி பெற்ற புதிய கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் கடந்த 6ம் தேதி பதவி ஏற்றனர். இதையடுத்து, மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் மற்றும் ஊராட்சி துணை தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது.